election.....முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைபற்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை மீண்டும் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டின் மார்ச் 17ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், பல்வேறு காரணிகளால் தேர்தல்கள் செயலகத்தினால் தேர்தலை பிற்போட நேரிட்டது. குறிப்பிட்ட இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் தொடர்ந்தும் செல்லுபடி தன்மையுடன் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களில் சிலர் மரணித்துள்ளதாலும், 35 வயதிற்கு குறைந்த வேட்பாளர்கள் குறித்த வயதெல்லையைத் தாண்டியிருப்பதாலும், இரண்டு வேட்புமனுக்களையும் நிராகரித்துவிட்டு, புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விகிதாசார தேர்தல் முறையிலேயே புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியுள்ள போதிலும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லை நிர்ணய செயற்பாடுகள் அந்த பிரதேசங்களில் இறுதித் தருவாயில் இருப்பதால் வாக்கெடுப்பை கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த இரண்டு பிரதேச சபைகளுக்கும் புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கும், கலப்பு தேர்தல் முறைக்கான சட்ட மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.